கியூபெக் மாகாண முதலமைச்சரும் ‘கொஅலிஷன் அவனீர் கியூபெக்’ (CAQ) கட்சியின் தலைவருமான கிறிஸ்டின் ஃபிரஷெட் (Christine Fréchette), தனது மாகாணத் தேர்தல் பிரச்சாரப் பணிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளார்.
அமெரிக்க இறக்குமதிகளுக்கு எதிராகக் கனடா விதிக்கவுள்ள கடுமையான பதிலடி வர்த்தக வரிகள் அமலுக்கு வரவுள்ள நிலையில், நிலைமையை ஆராய அவர் அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், பால் பொருட்கள், எஃகு, தாமிரம் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்ட 28 பில்லியன் டாலர் மதிப்பிலான கனடியப் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்தது.
இதற்குப் பதிலடியாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15 முதல் 50 சதவீதம் வரையிலான கடுமையான வரிகளை விதிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, கியூபெக் மாகாண முதலமைச்சரினால் இணையவழியில் இந்த அவசர அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டது.
தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில், முதலமைச்சர் தனது பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு அமைச்சரவையைக் கூட்டுவது அரிதான நிகழ்வாகப் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.











