‘கோமாதா’வைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், துறவிகளை அவமதிப்பவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற பகவத் கீதை பாராயண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், மேற்கு வங்கத்தில் நிலைமை மாறிவிட்டதாகவும், மக்கள் இப்போது அச்சமின்றி பகவத் கீதையைப் பாராயணம் செய்யலாம் என்றும் கூறினார்.
அத்துடன், பகவத் கீதை மற்றும் அனுமன் சாலிசாவைத் தயக்கமின்றிப் பாராயணம் செய்து பரப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“நாம் ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிக்கலாம் மற்றும் சங்கு ஊதலாம். இதைப் பற்றிப் பயப்படத் தேவையில்லை. மாநிலத்தில் இப்போது ‘மாற்றத்தின் காற்று’ வீசுகிறது” என சுவேந்து அதிகாரி மேலும் தெரிவித்தார்.
மேலும், “திலகம், வேட்டி மற்றும் துளசி அரசு வந்துவிட்டது. இதுவே ‘கோமாதா’வைப் பாதுகாக்கும் அரசு” எனக் குறிப்பிட்ட அவர், கோமாதாவைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், துறவிகளை அவமதிப்பவர்களைத் தனது அரசு சிறையில் அடைக்கும் என்றும் எச்சரித்தார்.
அத்துடன், நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிக்கும் சக்திகளுக்கு எதிராக மக்கள் ஒன்றுபட்டு விழிப்புடன் நிற்க வேண்டும் என்றும் முதலமைச்சர் சுவேந்து அதிகாரி கேட்டுக்கொண்டார்.
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க முதல் முறையாக ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து இம்மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.











