பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை அகில இலங்கை ரீதியில் 2ம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளதாக தவிசாளர் பா.பாலேந்திரன் இன்று தெரிவித்தார்.
தேசிய உற்பத்தித்திறன் விருது – 2025/2026 போட்டியில், அரச திணைக்களங்களுக்கு இடையிலான தேர்வில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்தமை தொடர்பான ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
பொதுமக்களுக்குச் சேவை வழங்கும் அரச திணைக்களங்கள், பாடசாலைகள், உற்பத்தி மற்றும் சேவைத்துறைத் திணைக்களங்கள் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் இப்போட்டியானது இடம்பெற்றிருந்தது.
இதில் பொதுமக்களுக்குச் சேவை வழங்கும் அரச திணைக்களங்கள் பிரிவில் முதன்முறையாகப் பங்கேற்ற வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, மொத்தமுள்ள 1000 புள்ளிகளில் 700 முதல் 849 புள்ளிகளுக்கு இடைப்பட்ட புள்ளிகளைப் பெற்று தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை உறுதி செய்துள்ளது.
ஆளணிப் பற்றாக்குறை மற்றும் வாகனப் பற்றாக்குறை போன்ற பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இச்சாதனை எட்டப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெறுவதே சபையின் இலக்காகும்.
இச்சாதனைக்கு உறுதுணையாக இருந்த உப தவிசாளர், உறுப்பினர்கள், செயலாளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் கிராம மட்ட பொது அமைப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பதாகவும் அவர் தெரிவித்தார்.











