ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவ முகாம்களில் இருந்த கடைசிப் படைகளும் முற்றாக வெளியேறியுள்ளதாக அமெரிக்க மற்றும் ஈராக் அதிகாரிகள் புதன்கிழமை அறிவித்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டு ஜோ பைடன் ஆட்சிக் காலத்தில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், தற்போதைய டிரம்பின் நிர்வாகத்தால் இந்த வெளியேற்றம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறியமையை ஈரானும் அதன் ஆதரவு ஆயுதக் குழுக்களும் தங்களின் வரலாற்று வெற்றியாகவும் அமெரிக்க திட்டத்திற்கு ஏற்பட்ட தோல்வியாகவும் கொண்டாடி வருகின்றன.
இதேவேளை, வளைகுடா பிராந்தியத்தில் முறிந்த போர் நிறுத்தத்தை மீண்டும் ஆரம்பிக்கத் தான் சமர்ப்பித்த புதிய முன்மொழிவுக்கு அமெரிக்காவிடம் இருந்து பதில் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஈரானின் இந்த முன்மொழிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்துவிட்டதாகக் கூறியிருந்தார்.
இருப்பினும், அமெரிக்காவின் உத்தியோகபூர்வ நிராகரிப்புத் தகவல் தமக்குக் கிடைக்கவில்லை என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி (Abbas Araqchi) தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே, நியூயோர்க்கில் நடைபெற்ற ஐ.நா கூட்டத்தின் இடையே கட்டார் மத்தியஸ்தர்கள் மூலம் அமெரிக்காவின் பதில் ஈரானுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஈரான் சமர்ப்பித்த முன்மொழிவில், ஈரானிய துறைமுகங்கள் மீதான தடுப்பு முற்றுகையை அமெரிக்கா நீக்க வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதாகவும் ஈரான் தெரிவித்திருந்தது.
எட்டப்படவுள்ள ஒப்பந்தத்தின் மூலம் உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக் கொள்ள ஈரான் விரும்புகிறது.
தற்போது இரு தரப்பும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பெருமளவில் உடன்பட்டாலும், அவற்றை நடைமுறைப்படுத்தும் வரிசைமுறை தொடர்பில் தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
அமெரிக்காவில் விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்திற் கொண்டு, தற்போதைய போருக்குப் பொறுப்பான அரசியல்வாதிகளை அதிகாரத்தில் இருந்து அகற்றுமாறு ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) அமெரிக்க வாக்காளர்களுக்கு 26 பக்கங்கள் கொண்ட கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இருப்பினும், இந்த போரில் ஈரான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விரைவில் சரணடைவார்கள் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.











