நிதிசார் குற்றங்களை விசாரிப்பதற்காக புதிய சிறப்புச் சட்ட அமுலாக்க முகவரகமொன்றை உருவாக்கும் மத்திய அரசின் திட்டத்தால், ஏற்கனவே ஆட்களற்ற நெருக்கடியை எதிர்கொண்டுள்ள தேசிய பொலிஸ் படையான ‘றோயல் கனேடியன் மவுண்ட் பொலிஸ்’ (RCMP) மேலும் பாதிக்கப்படும் என கனடிய பொலிஸ் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
பணமோசடி மற்றும் இணையவழி நிதி மோசடிகள் போன்ற அதிகரித்து வரும் நிதிசார் குற்றங்களைக் கையாள்வதற்காக, ‘கனடா நிதிசார் குற்றப்பிரிவு முகவரகம்’ (Financial Crimes Agency – FCA) என்ற புதிய அமைப்பை உருவாக்குவதற்கு லிபரல் கட்சியின் மத்திய அரசாங்கம் ‘C-29’ மசோதாவை சமர்ப்பித்துள்ளது.
அரசின் இந்த முன்மொழிவின் கீழ் உருவாக்கப்படவுள்ள புதிய முகவரகத்தில் பொதுமக்கள் சார்ந்த புலனாய்வாளர்கள், குற்றவியல் மற்றும் நிதி புலனாய்வுப் பிரிவினர், சொத்து மீட்பு நிபுணர்கள் மற்றும் சிறப்பு வழக்கறிஞர்கள் இடம்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சட்டமூலம் குறித்து ஆய்வு செய்து வரும் நாடாளுமன்றக் குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த தேசிய பொலிஸ் கூட்டமைப்பின் (NPF) தலைவர் ராப் ஃபாரர் (Rob Farrer) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றக் குழுவில் இது குறித்துப் பேசிய ராப் ஃபாரர், நிதிசார் குற்றங்களுக்கு எதிரான சட்ட அமலாக்கத்தை வலுப்படுத்துவதை தாம் ஆதரிப்பதாகவும், எனினும் இதன் வெற்றி என்பது புதியதொரு அமைப்பை உருவாக்குவதில் மட்டும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன், தகுதியான மாற்றுப் பணியாளர்கள் இன்றி தற்போதுள்ள அதிகாரிகளை புதிய முகவரகத்துக்கு மாற்றும் செயலானது, நிலுவையிலுள்ள விசாரணைகளைப் பாதிப்பதுடன் எஞ்சியுள்ள அதிகாரிகளின் பணிச்சுமையையும் அதிகரிக்கும் என ராப் ஃபாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.











