கனடாவிலிருந்து கியூபெக், அல்பர்ட்டா மற்றும் சாஸ்காட்செவன் ஆகிய மாகாணங்கள் பிரிந்து தனியாக இயங்குவதே சிறந்தது என எலோன் மாஸ்க் முன்வைத்த யோசனையை, அல்பர்ட்டா மற்றும் சாஸ்காட்செவன் மாகாணங்களின் முதல்வர்கள் உடனடியாக நிராகரித்துள்ளனர்.
பிரபல தொழிலதிபரான எலோன் மாஸ்க், எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவொன்றில், “கியூபெக் மாகாணம் கனடாவிலிருந்து பிரிந்து தனிநாடாக இயங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், அல்பர்ட்டா மற்றும் சாஸ்காட்செவன் ஆகிய மாகாணங்களும் கனடாவிலிருந்து பிரிவதே அந்தந்த மாகாணங்களுக்கு நன்மை பயக்கும் என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவிற்குப் பதிலளித்துள்ள சாஸ்காட்செவன் மாகாண முதல்வர் ஸ்காட் மோ (Scott Moe), “இல்லை” என ஒற்றை வார்த்தையில் மிகத் தீர்க்கமாக எலோன் மாஸ்க்கின் கருத்தை நிராகரித்துள்ளார்.
அதேபோல, அல்பர்ட்டா மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித்தும் (Danielle Smith) எலோன் மாஸ்க்கின் யோசனையைத் தாம் முற்றாக மறுப்பதாகக் கடுமையான பதிலை வெளியிட்டுள்ளார்.
கியூபெக் மாகாணத் தேர்தலில் சுயாட்சிக் கொள்கையைக் கொண்ட ‘பார்ட்டி கியூபெக்வா’ கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையிலும், அல்பர்ட்டா மாகாணத்தில் கனடாவில் நீடிப்பதா அல்லது பிரிந்து செல்வதா என்பது தொடர்பில் மக்கள் கருத்துக்கணிப்பு நடத்தப்படவுள்ள நிலையிலும் எலோன் மாஸ்க்கின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.











