2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெலிகமவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் மற்றும் மேலும் எட்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக மாத்தறை மேல் நீதிமன்றத்தில் இன்று (07) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாத்தறை மேல் நீதிமன்ற நீதிபதி நந்தன அமரசிங்க முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் ஒன்பது பிரதிவாதிகளுக்கும் வாசித்துக் காட்டப்பட்டன.
குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரையும் பிணையில் விடுவிக்குமாறு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
2023 டிசம்பர் பிற்பகுதியில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவைச் (CCD) சேர்ந்த எட்டு பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவினால் வெலிகமவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஒன்றோடு இச்சம்பவம் தொடர்படைந்துள்ளது.
இந்தச் சம்பவத்தின் போது, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக் குழுவில் அங்கம் வகித்த பொலிஸ் சார்ஜண்ட் ஒருவர், வெலிகம பொலிஸாரால் சுடப்பட்டு உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கு மீண்டும் நவம்பர் 27 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.











