கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த சி.எம்.ஆர்.எல். நிறுவனம், முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் நடத்திய ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்துக்கு மாதந்தோறும் தொகையை வழங்கி வந்த விவகாரம் தொடர்பாகப் பண முறைகேடு வழக்கு எழுந்துள்ளது.
சி.எம்.ஆர்.எல். நிறுவனம் வீணா விஜயனின் நிறுவனத்திற்கு மாதந்தோறும் 3 லட்சம் ரூபாயும், ஆலோசனை வழங்கியதாக 5 லட்சம் ரூபாயும் வழங்கியுள்ளதாகவும், இந்தப் பணம் வெளிநாட்டுக்குப் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், அவரது மகள் வீணா விஜயன், அவரது கணவரும் முன்னாள் அமைச்சருமான முகமது ரியாஸ் ஆகிய 3 பேர் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுதொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தனி நீதிபதி பக்ரூதீன், குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் மீதும் முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
அதன்பேரில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து பினராயி விஜயன் உள்பட 3 பேரும் கேரளா ஐகோர்ட்டில் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து காவல்துறையின் நடவடிக்கைக்குத் தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் பினராயி விஜயன் தரப்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வரும் 23ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதால், அதன் பின் ஆஜராகிப் பதிலளிப்பார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.











