அல்பேட்டா மாகாணத்தில் வரவிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பொது வாக்கெடுப்பை முன்னிட்டு, இரு தரப்பு பிரசாரங்களும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. அல்பேட்டா மாகாணம் முழுவதும் வாக்காளர்களைத் திரட்டும் பணியில் அரசியல் தலைவர்களும் ஆதரவு அமைப்புகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
எதிர்வரும் 19 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ள இப்புதிய பொது வாக்கெடுப்பில் மொத்தம் 10 கேள்விகள் இடம்பெற்றுள்ளன. இதில் பத்தாவது கேள்வி, கனேடிய கூட்டாட்சியில் தொடர்வதா அல்லது பிரிவினை குறித்து இரண்டாவது வாக்கெடுப்பை நடத்துவதா என்ற தெரிவுகளை அல்பேட்டா வாக்காளர்களின் முன்வைக்கிறது. மீதமுள்ள ஒன்பது கேள்விகளும் அல்பேர்ட்டாவின் குடியேற்றம் மற்றும் அரசியலமைப்புச் சட்டம் தொடர்பானவை ஆகும்.
ஏற்கனவே முன்கூட்டிய வாக்குப்பதிவு மற்றும் சிறப்பு வாக்குகள் மூலம் இலட்சக்கணக்கான வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். வாக்கெடுப்புக்கு முந்தைய இறுதி நாள்களை ஒட்டி, இரு தரப்பினரும் அல்பேர்ட்டா மாகாணம் முழுவதும் மாபெரும் பேரணிகளையும் பொதுக்கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
அல்பேட்டா முதலமைச்சர் டேனியல் ஸ்மித், தான் கனடாவுடன் இணைந்திருக்கும் தெரிவுக்கே வாக்களித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். வாக்காளர் பங்களிப்பை அதிகரிப்பதற்காகத் தான் இந்த வார இறுதி முழுவதும் பல்வேறு சமூகங்களில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மறுபுறம், அல்பேட்டா பிரிவினையை ஆதரிக்கும் ‘லெட் அல்பேட்டா டெசைட்’ (Let Alberta Decide) அமைப்பின் ஏற்பாட்டில் சனிக்கிழமை பிற்பகல் சட்டமன்றத்திற்கு வெளியே பெரிய அளவிலான சுதந்திரப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கியத் வில்சன் மற்றும் டான்யா கிளெமன்ஸ் தலைமையிலான இக்கூட்டமைப்பினர், அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் அல்பேட்டாவுக்கும் ஒட்டாவாவுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதற்கான அவசியத்தை வலியுறுத்தவுள்ளனர்.
கூட்டாட்சியை ஆதரிக்கும் தரப்பில் பிரதமர் மார்க் கார்னி மற்றும் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பியர் பொயிலியெவ் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் அல்பேட்டாவிற்கு சென்று தீவிரப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.











