ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோரியும், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2013ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த 10 பெண்கள் தமிழகத்தில் தொடர் சந்திப்புகளை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி இந்தியாவின் தமிழ்நாட்டுக்குப் பயணமான இவர்கள், அங்கு 20 நாட்கள் தங்கியிருந்து, 48-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினரைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளைச் சந்தித்துத் தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இதன்போது, முன்னாள் முதலமைச்சர்களான மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களையும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
மேலும், பிரேமலதா விஜயகாந்த், அற்புதம் அம்மாள், புதுச்சேரி முதலமைச்சர் ந. ரங்கசாமி, மலேசிய உரிமைக் கட்சித் தலைவர் பேராசிரியர் இராமசாமி பழனிச்சாமி உள்ளிட்ட அரசியல் மற்றும் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்துள்ளனர்.
இந்தச் சந்திப்புகளின்போது, ஈழத் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டதுடன், 2013ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தமிழக முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர்., கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களுக்கும் சென்று பெண்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
தமிழகத்துக்கான இந்தப் பயணத்தை நிறைவு செய்து இலங்கைக்குத் திரும்பிய பெண்கள், கடந்த வாரம் திருகோணமலையில் மாநாடு ஒன்றையும் நடத்தியுள்ளனர்.
இந்த மாநாட்டில் மதகுருமார்கள், திருகோணமலை மாநகர சபை முதல்வர் க. செல்வராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறீநேசன், இ. சிறீநாத் மற்றும் க. கோடீஸ்வரன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும், சமூகச் செயற்பாட்டாளர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்ட சந்திப்புகள் மற்றும் திருகோணமலையில் நடத்தப்பட்ட மாநாட்டின் ஊடாக, ஈழத் தமிழ் மக்களின் நீதிக்கான கோரிக்கைகளைப் பல்வேறு தரப்பினரிடமும் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.











