யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக, வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, மாவட்டச் செயலகப் பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
நடைபெற்று முடிந்த பரீட்சை மற்றும் அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட நேர்முகத் தேர்வுக்கான பெயர்ப் பட்டியல் ஆகியவற்றில், வேலையற்ற பட்டதாரிகளின் அடிப்படை உரிமைகள் முழுமையாக மீறப்பட்டுள்ளதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர்.
குறித்த பட்டியல் எந்த அடிப்படையில் வெளியிடப்பட்டது என்பது தொடர்பில் கேள்வி எழுப்பிய அவர்கள், அரச சேவையில் ஏற்கனவே பணியாற்றும் பட்டதாரிகள் அதிகளவில், பாடவாரியாகவும் மாகாண வாரியாகவும் உள்வாங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இந்த நடைமுறை வேலையற்ற பட்டதாரிகளைப் புறக்கணிக்கும் செயலாக அமைந்துள்ளதாகவும், இதனால் பட்டதாரிகள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
எனவே, பரீட்சைப் புள்ளிகள் வழங்கப்பட்ட முறைமை தொடர்பில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் மற்றும் வேலையற்ற பட்டதாரிகள் தலா 50 சதவீதம் என்ற விகிதத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக வடக்கு மாகாணம் தழுவிய வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.











