யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக, தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரிடரால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் எனத் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா, 150 பக்கங்களைக் கொண்ட இடைக்கால அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
குறித்த அறிக்கையில், செம்மணியில் கண்டறியப்பட்ட அடக்கங்களின் தன்மை மற்றும் அவற்றின் பின்னணி தொடர்பாக உறுதியான முடிவுக்கு வர முடியவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சூழல் சார்ந்த சான்றுகள், முறையான அடக்க முறைகளுடன் அதிக ஒற்றுமையைக் கொண்டுள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், அடக்கங்களின் செறிவு, தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரிடரின் விளைவாக ஏற்பட்டிருக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், சடலங்கள் எந்தச் சூழ்நிலையில் அடக்கம் செய்யப்பட்டன என்பதைத் துல்லியமாக நிரூபிப்பதற்குப் போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மனித எச்சங்களுடன் ஆடைகள் காணப்படாமை தொடர்பாகவும் அறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஆடைகள் காணப்படவில்லை என்பதற்காக, உயிரிழந்தவர்கள் ஆடையின்றி அடக்கம் செய்யப்பட்டார்கள் என முடிவெடுக்க முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மண்ணின் தன்மை, நுண்ணுயிர்களின் செயற்பாடு மற்றும் அடக்கம் செய்யப்பட்ட காலப்பகுதி ஆகியவற்றின் காரணமாகத் துணிகள் சிதைவடைந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், சில இடங்களில் பொத்தான்கள், வளையங்கள் மற்றும் ஆடைகளில் பயன்படுத்தப்படும் சிறிய உலோகப் பொருத்திகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவை ஆடைகள் இருந்திருக்கக்கூடும் என்பதற்கான சான்றுகளாகக் கருதப்படலாம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இடைக்கால அறிக்கையின் பிரதிகளைப் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளுக்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதி நடைபெறவுள்ள செம்மணி புதைகுழி வழக்கின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில், இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டு, அது தொடர்பில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.











