போர்ன்ஹப் (Pornhub) இணையதளத்தின் தாய் நிறுவனமான ‘ஐலோ’ (Aylo) நிறுவனத்திற்கு எதிராக கூட்டு வழக்கை (Class Action) தொடர கியூபெக் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஒப்புதலின்றி வெளியிடப்பட்ட அந்தரங்க மற்றும் பாலியல் வன்கொடுமை காணொளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில், இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கியூபெக் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த அனுமதியானது, உலகம் முழுவதும் உள்ள பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நபர்கள் நீதி கோரி, நீதிமன்றத்தை அணுக வழிவகுத்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளாகவே போர்ன்ஹப் இணையதளத்தில் பயனர்களால் பதிவேற்றப்படும் காணொளிகளின் பாதுகாப்பு மற்றும் முறையான கட்டுப்பாடுகள் குறித்து பல்வேறு தரப்பினரும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்துள்ளனர்.
அனுமதி இன்றிப் பதிவு செய்யப்பட்ட மற்றும் பகிரப்பட்ட ஆபாசக் காணொளிகளால் தங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் தனியுரிமை மீறல்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் கோருகின்றனர்.
குறிப்பாக, சிறுவயதில் தனக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக் காட்சிகள் இணையத்தில் அனுமதியின்றிப் பகிரப்பட்டதாக ஒன்ராறியோவைச் சேர்ந்த பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டோரின் ஒப்புதலின்றி இணையத்தில் பதிவேற்றப்படும் சட்டவிரோதக் காணொளிகளைத் தடுத்து அகற்றுவதில் போர்ன்ஹப் நிறுவனத்தின் நிர்வாகம் தவறிவிட்டதாகவும், அத்தகைய உள்ளடக்கங்கள் மூலம் அந்நிறுவனம் லாபம் ஈட்டியுள்ளதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
கியூபெக் உயர் நீதிமன்றத்தினால் கூட்டு வழக்குக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, உலகளாவிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இவ்வழக்கில் தங்களை இணைத்துக்கொள்ளவும், முறையான இழப்பீடு கோரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத் தக்கது.











