நாட்டை மாற்ற வேண்டும் என நினைத்தால், முதலில் நமது நடத்தையை மாற்றுவோம். நாளைய தலைவர்களாகக் காத்திருக்காமல், இன்றைய மாற்றத்துக்கான முன்னுதாரணங்களாக இளைஞர்கள் திகழ வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
‘தூய இலங்கை’ (Clean Sri Lanka) செயற்றிட்டத்தின் கீழ், தீவக வலயக் கல்வி அலுவலகத்தின் பங்களிப்புடன் நடைபெற்ற ‘அடுத்த தலைமுறைத் தலைவர்கள்’ (Next Gen Leaders) தலைமைத்துவப் பயிற்சிச் செயலமர்வு இன்றைய தினம் புதன்கிழமை புங்குடுதீவு மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.
வீதிகள் சுத்தமாக இருக்க வேண்டும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும், பாடசாலைகள் சிறந்து விளங்க வேண்டும், அரச அலுவலகங்களில் பணிகள் விரைவாக நடைபெற வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர்.
ஆனால், அந்த மாற்றத்துக்காகத் தமது சிறிய பங்களிப்பை வழங்க வேண்டிய நேரத்தில் பலர் தயங்குகின்றனர். மாற்றத்தை அரசாங்கத்தின் திட்டங்களால் மட்டும் ஏற்படுத்த முடியாது, மக்களும் தமது நடத்தையை மாற்றிக்கொள்ள வேண்டும்.
‘தூய இலங்கை’ செயற்றிட்டம் சுற்றாடல் தூய்மையை மட்டுமன்றி, சமூகப் பொறுப்புணர்வு, ஒழுக்கம், நேர்மை மற்றும் பிறரை மதித்தல் ஆகிய பண்புகளையும் அன்றாட வாழ்வில் நடைமுறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அந்த மாற்றத்தை உருவாக்குவதில் இளைய தலைமுறையினருக்கு முக்கிய பங்கு உள்ளது.
கல்வியறிவு மட்டுமே ஒருவரைச் சிறந்த தலைவராக்கிவிடாது. தமது பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு, துணிவுடன் முடிவெடுக்கும் திறன், பிறரது துயரத்தைப் புரிந்துகொள்ளும் இரக்கம் ஆகியவையே உண்மையான தலைமைத்துவத்தின் அடிப்படைகள்.
பிறரது நேரத்தையும் சிரமங்களையும் மதித்தல், தவறுகளை ஒப்புக்கொண்டு திருத்திக்கொள்ளுதல், பொதுச் சொத்துகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றையும் மாணவர்கள் தமது வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும்.
ஒரு நல்ல தலைவர் எத்தனை பேர் அவருக்குப் பின்னால் வருகின்றனர் என்பதால் மதிப்பிடப்படுவதில்லை, அவரது தலைமைத்துவத்தால் எத்தனை பேரின் வாழ்க்கை மேம்படுகிறது என்பதாலேயே மதிப்பிடப்படுகிறார்.
மாணவர்கள் தமக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதுடன், வாய்ப்புகள் கிடைக்காத மற்றவர்களுக்கும் உதவ முன்வர வேண்டும்.
தலைமைத்துவம் எதிர்காலத்தில் ஒரு பதவியைப் பெறும்போது ஆரம்பிப்பதில்லை. வகுப்பறையில், விளையாட்டு மைதானத்தில், வீட்டில், கிராமத்தில் நாம் நடந்துகொள்ளும் விதத்திலிருந்தே அது ஆரம்பிக்கிறது.
எனவே, இச்செயலமர்வில் கற்றுக்கொள்ளும் விடயங்களில் ஒன்றையாவது உடனடியாகத் தமது வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும். நடத்தையில் ஏற்படும் ஒரு சிறிய மாற்றமே இந்நிகழ்வின் உண்மையான வெற்றியாக அமையும் என ஆளுநர் தெரிவித்தார்.











