அமெரிக்காவில் உள்ள முதியவர்களை இலக்கு வைத்து, பல மில்லியன் டொலர் பணத்தைச் சூறையாடிய மோசடி வலையமைப்பின் முக்கிய உறுப்பினரான மொண்ட்ரியலைச் சேர்ந்த ஜிம்மி யிலிமாகி (Jimmy Ylimaki) அமெரிக்க நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
அமெரிக்க முதியவர்களைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு, அவர்களின் பேரன் அல்லது பேத்தி சட்டப் பிரச்சினையில் சிக்கிச் சிறையில் இருப்பதாகவும், அவர்களைப் பிணையில் எடுக்க உடனடியாகப் பெருந்தொகை தேவைப்படுவதாகவும் கூறி இந்த மோசடி நடத்தப்பட்டுள்ளது.
இச்சதித்திட்டத்தில் வழக்கறிஞராக நடித்து, முதியவர்களிடமிருந்து பல்லாயிரக்கணக்கான டொலர்களைப் பறிக்கும் நபராக ஜிம்மி செயற்பட்டுள்ளார்.
இந்த மோசடி வலையமைப்பில் ஈடுபட்ட வெறும் 67 வாரக் காலப்பகுதியில் மட்டும் இவர் 3,67,000 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பணத்தைச் சம்பாதித்துள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மொண்ட்ரியல் பகுதியில் பொலிஸார் நடத்திய திடீர்ச் சோதனையின் போது, முதியவர்களுக்குத் தொலைபேசி அழைப்புகளை விடுத்துக்கொண்டிருந்த நிலையிலேயே ஜிம்மி சிக்கிக்கொண்டார்.
எனினும், உடனடியாகக் கைது செய்யப்படாத நிலையைப் பயன்படுத்தி அவர் கோஸ்டாரிக்காவிற்குத் தப்பிச் சென்றார்.
தொடர்ந்து, 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த மோசடியுடன் தொடர்புடைய 24 பேர் கனடாவில் கைது செய்யப்பட்ட போதிலும், ஜிம்மி தலைமறைவாகவே இருந்தார்.
கோஸ்டாரிக்கா நாடு அமெரிக்காவுக்குச் சந்தேக நபர்களைக் கைமாற்றிவிடும் கொள்கையைக் கொண்டிருப்பதை அறிந்த அவர், அமெரிக்காவின் கைமாற்றல் கோரிக்கைகளை வரலாற்று ரீதியாக நிராகரித்து வரும் அண்டை நாடான நிகராகுவாவிற்குத் தப்பிச் சென்றார்.
எனினும், தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த அமெரிக்க அதிகாரிகள் கடந்த 2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிகராகுவாவில் வைத்து அவரைப் பிடித்து அமெரிக்காவிற்கு அழைத்து வந்தனர்.
ஆரம்பத்தில் சதித்திட்டம் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுகளை மறுத்து வந்த ஜிம்மி, கடந்த 19ஆம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.











