கொலைக் குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்துப் பிணையில் வெளிவந்த நபருக்கு சட்டப் பீடத்தில் சேர்க்கை வழங்கப்பட்ட விவகாரம், கியூபெக்கின் மெக்கில் பல்கலைக்கழக நிர்வாகத்தின் பாதுகாப்பு மற்றும் சேர்க்கை நடைமுறைகளில் உள்ள பாரிய குறைபாடுகளை வெளிப்படுத்தியுள்ளது.
மொண்ட்ரியலில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தின் (McGill University) சட்ட பீடத்தில், கடந்த ஓகஸ்ட் மாதம் ஜெஃப்ரி ஜார்ஜ் எவெர்ட் (Jeffrey George Ewert) என்ற 60 வயதுடைய நபர் கல்வி பயில அனுமதிக்கப்பட்டார்.
1980 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இரண்டு பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற கொடூரத் தாக்குதல்கள் தொடர்பாக, இரண்டாம் நிலை கொலைக் குற்றம் மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தண்டனை பெற்ற இவர், 40 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு 2025 இல் நிபந்தனைப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இவர் சட்ட பீடத்தில் பயிலும் செய்தி இம்மாதத்தில் பரவியதைத் தொடர்ந்து, மாணவர்களிடையே பெரும் அச்சமும் சர்ச்சையும் உருவானது.
குறிப்பாக, பெண் மாணவர்களின் பாதுகாப்பு குறித்துக் கவலைகள் எழுப்பப்பட்டதை அடுத்து, பல்கலைக்கழக நிர்வாகம் அவரை வளாகத்திற்குள் நுழையத் தடை விதித்தது.
இதனிடையே, கனடா சிறைச்சாலைகள் ஆணைக்குழு வெளியிட்ட பிடியாணை உத்தரவின் பேரில் எவெர்ட் மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுப் பாதுகாப்புச் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் மெக்கில் பல்கலைக்கழக வளாகத்தில் கடும் விவாதங்களை முடுக்கிவிட்டுள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பை முதன்மைப்படுத்தக் கோரி ஒரு சாராரும், குற்றவாளிகளின் மறுவாழ்வு மற்றும் கல்வி உரிமையை வலியுறுத்தி மற்றொரு சாராரும் மனுக்களை அளித்துள்ளனர்.
இதேவேளை, கனடியப் பல்கலைக்கழகங்கள் எவையுமே மாணவர் சேர்க்கையின் போது குற்றப் பின்னணி குறித்த சோதனைகளை (background checks) மேற்கொள்வதில்லை என்பதை வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எவெர்ட் மீண்டும் கல்வி பயில அனுமதிக்கப்பட்டால், வகுப்பறைகளில் அவரது வருகை குறித்து முன்னறிவிப்பு செய்யப்பட வேண்டும் என்றும், பெண் மாணவர்களுடன் தனிமையில் இருக்க அனுமதிக்கக் கூடாது என்றும் ஒரு பகுதி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தனது மாணவர் சேர்க்கை நடைமுறைகளை தீவிரமாக மறுபரிசீலனை செய்து வருவதாக மெக்கில் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.











