கிளிநொச்சியில் “பிரஜாசக்தி” தேசிய வறுமை ஒழிப்பு வேலைத்திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்வு இன்று (28) நடைபெற்றது.
“வறுமையை வெல்வோம், வளமான கிராமங்களை உருவாக்குவோம், மக்களின் சக்தியால் நாட்டைக் கட்டியெழுப்புவோம்” என்ற தொனிப்பொருளில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, கிராமிய மக்களை வலுவூட்டும் தேசிய சமூக வலுவூட்டல் வேலைத்திட்டம் தொடர்பாக வடமாகாண சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உப்பாலி பன்னில பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். அத்துடன், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.
இதன்போது, 2026ஆம் ஆண்டில் பிரஜாசக்தி திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு தலா 324 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தின் 363 கிராமங்களுக்கும், கிளிநொச்சி மாவட்டத்தின் 325 கிராமங்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டது.
கிராமிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், வருமான வாய்ப்புகளை அதிகரித்தல் மற்றும் நிலையான கிராமிய அபிவிருத்தியை ஏற்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.











