கியூபெக் மாகாணம் லெவிஸ் (Lévis) நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில், ஆசிரியர்களின் படங்களை அவதூறாக மாற்றியமைத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட 10 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஹொரைசன் உயர்நிலைப் பள்ளியில் (Horizon High School) பயிலும் மாணவர்களே இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே அந்த மாணவர்கள் தமது ஆசிரியர்களின் படங்களை அவதூறாக மாற்றியமைத்துள்ளனர்.
மாற்றியமைக்கப்பட்ட படங்கள் அனைத்தும் ‘ஸ்னாப்சாட்’ (Snapchat) செயலியில் பதிவேற்றப்பட்டுள்ளன.
இது பள்ளி விதிமுறைகளை மீறும் செயல் என்றும், புண்படுத்தும் மற்றும் வன்முறைத் தன்மையைக் கொண்ட உள்ளடக்கங்களை வெளியிடுவதைத் தடை செய்யும் நடத்தை விதிகளை மீறியுள்ளதாகவும் கல்விச் சேவை மையமான ‘சென்டர் டெ சேவ்செஸ் ஸ்கொலெயர் டெஸ் நெவிகேட்டர்ஸ்‘ (CSSDN) தெரிவித்துள்ளது.
இந்தச் செயலில் ஈடுபட்ட மாணவர்களைப் பற்றிய தகவல்கள் அனைத்தும், அதே பள்ளியைச் சேர்ந்த சக மாணவர்களாலேயே பள்ளி அதிகாரிகளிடம் முதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்ட பள்ளி நிர்வாகமும் பொலிஸாரும், சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து, அவர்களைக் கொண்டே அந்தப் படங்களை நீக்கச் செய்தனர்.
மேலும், பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கையாக அந்த மாணவர்களுக்கு மூன்று நாட்கள் இடைநீக்கம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.











