இந்தியாவில் இருந்து இலங்கைக்குத் திரும்பிய வேளையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட நபர், மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டார்.
வழக்கு விசாரணைகளுக்காக வியாழக்கிழமை (29.10.2026) யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
அத்துடன், குறித்த வழக்கை நவம்பர் 12ஆம் திகதிக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
யாழ்ப்பாணம் – மாசியப்பிட்டி, அம்மன் கோவிலடி பகுதியைச் சேர்ந்த கந்தசாமி கிருஷ்ணகுமார் என்ற 50 வயதானவரே இவ்வாறு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டார்.
கடந்த 26ஆம் திகதி இந்தியாவின் தமிழகத்தில் இருந்து விமானம் மூலம் இலங்கை திரும்பிய போதே, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட கிருஷ்ணகுமார் கடந்த 2015ஆம் ஆண்டு தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டு, 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்திருந்தார்.
அதன் பின்னர் திருச்சி சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், அண்மையில் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையிலேயே தற்போது இலங்கைக்குத் திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.











