மொன்றியல் நகரில் உள்ள யூதப் பள்ளி மீது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட நபருக்கு, ஐந்தரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மொன்றியல் (Montreal) நகரில், கோட்-டெஸ்-நிகேஸ் (Côte-des-Neiges) பகுதியில் அமைந்துள்ள ‘யெஷிவா கெடோலா’ (Yeshiva Gedola) என்ற யூதப் பள்ளியின் நுழைவாயிலை இலக்கு வைத்து கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி அதிகாலை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் பள்ளியின் கட்டடம் சேதமடைந்த போதிலும், யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.
இந்த வழக்கில் தொடர்புடைய அப்திரசாக் மாக்தி அகமது (Abdirazak Mahdi Ahmed) என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில், அவர் தனது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து மொன்றியல் நீதிமன்றத்தில் அவருக்கு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டதாக அரசு தரப்பு வழக்குத்தொடுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அவர் ஏற்கனவே சிறையில் கழித்த காலத்தைக் கணக்கில் கொண்டு, மீதமுள்ள சுமார் 18 மாத காலச் சிறைத் தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டும் என அரசு தரப்புப் பேச்சாளர் லூகாஸ் பாஸ்டியன் (Lucas Bastien) தெரிவித்தார்.
மேலும், சிறைத் தண்டனைக்குப் பிறகு மூன்று ஆண்டுகளுக்குக் கண்காணிக்கப்படும் நிபந்தனை உத்தரவும் (probation order), ஆயுதம் வைத்திருக்கத் தடைவிதிக்கும் உத்தரவும் அவருக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.











