கனடாவின் கியூபெக் மாகாணத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்த Parti Québécois கட்சியின் வேட்பாளரும் முன்னாள் ஊடகவியலாளருமான ஸ்டெஃபனி மார்ட்டின் (Stéphanie Martin), கபிடால்-நஷனல் (Capitale-Nationale) பிராந்தியத்திற்கான அமைச்சரின் சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசின் இந்நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன.
வேனியர்-லெ-ரிவியேர்ஸ் (Vanier-Les-Rivières) தொகுதியில் Parti Québécois கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஸ்டெஃபனி மார்ட்டின், இனி கபிடால்-நஷனல் பிராந்தியத்திற்குப் பொறுப்பான அமைச்சர் நிகோலஸ் ஜிரார்டின் (Nicolas Girard) கீழ் நேரடியாகப் பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கபிடால்-நஷனல் பிராந்தியத்தில் PQ கட்சி எந்தவொரு சட்டமன்ற உறுப்பினரையும் வெற்றிபெறச் செய்யாத நிலையில், கியூபெக் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் பிரதிநிதித்துவத்தை அரசாங்கத்தினுள் பலப்படுத்துவதற்காகவே முதலமைச்சர் போல் செயின்ட்-பியர் பிளமொண்டன் (Paul St-Pierre Plamondon) இந்த நியமனத்தை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இப்புதிய நியமனம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் நிகோலஸ் ஜிரார்ட், ஸ்டெஃபனி மார்ட்டினின் நியமனமானது அப்பிராந்தியத்தில் கியூபெக் அரசாங்கத்தின் பிரசன்னத்தை வலுப்படுத்துவதுடன், முக்கிய கோப்புகளை நெருக்கமாகக் கண்காணிக்க உதவும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டெஃபனி மார்ட்டின் அமைச்சருக்கு உதவுவதுடன், அவர் சமூக நிகழ்வுகளில் பங்கேற்க முடியாத சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தின் பிரதிநிதியாகவும் செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது புதிய பதவி குறித்துச் கருத்துத் தெரிவித்த ஸ்டெஃபனி மார்ட்டின், கியூபெக் அரசாங்கத்தினுள் தனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு குறித்து மகிழ்ச்சியடைவதாகவும், இதனைத் தனது திறமைக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
கியூபெக் அரசாங்கத்தின் இத்தீர்மானத்தைக் கியூபெக் கன்சர்வேட்டிவ் கட்சி (Quebec Conservatives) மற்றும் ‘கியூபெக் சொலிடேர்’ (Québec Solidaire – QS) முதலான கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.











