வவுனியா தாண்டிக்குளத்தின் வான் பாய்ந்து வரும் நீர் கறுப்பு நிறமாகவும், நுரைத்த நிலையிலும் கடும் துர்நாற்றத்துடனும் காணப்படுவதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தாண்டிக்குளத்திலிருந்து வெளியேறும் நீர் பேராறு நீர்த்தேக்கத்தைச் சென்றடைவதுடன், அங்கிருந்தே வவுனியா மாவட்ட மக்களுக்கான குடிநீர் விநியோகம் முன்னெடுக்கப்படுகின்றது.
இதனால் குடிநீரின் தரம் தொடர்பான அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், பல்வேறு அரச திணைக்கள அதிகாரிகள் இணைந்து விசேட கள ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது குளத்தின் உட்பகுதி, வான் பகுதி மற்றும் வீதியோர வடிகால்களில் இருந்து நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுகூடப் பரிசோதனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வவுனியா வைத்தியசாலையின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ஒருங்கிணைப்பில் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தாண்டிக்குளத்தைத் தூர்வாருவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கமக்கார அமைப்பினருக்கு கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.











