2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.
அத்துடன், மன்னார் பேசாலை மீன்பிடி துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக 5,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை மன்னார் மாவட்ட மக்களின் நீண்ட காலப் பிரச்சினைகள், தேவைகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான விடயங்களை நன்கு அறிந்தவராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் இருப்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது, “இது சரிதானே? மக்கள் விரும்புவதும் இதைத்தானே?” என்ற கருத்தையும் முன்வைத்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த அறிவிப்புகள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் ஏனைய உரிமைகள் அமைப்பின் மன்னார் மாவட்ட அமைப்பாளரும், தொழிலதிபருமான ரிசான் சேக் அமானி,
மன்னார் மாவட்ட மக்கள் சார்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் மன்னார் மாவட்ட மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளைத் தொடர்ந்து முன்வைத்து வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டு வருவதன் மூலம் மாவட்ட மக்களுக்குத் தரமான மருத்துவ சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும், வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதற்கும் வாய்ப்புகள் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று, பேசாலை மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்தி மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், மீன் பிடித்துறையின் வளர்ச்சிக்கும் மாவட்டத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் பங்களிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டங்கள் வெறும் அறிவிப்புகளாக மாத்திரம் நின்றுவிடாமல், உரிய காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும், மாவட்ட மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்புகளும் அடிப்படைப் பிரச்சினைகளும் உரிய முறையில் தீர்க்கப்பட வேண்டும் எனவும் ரிசான் சேக் அமானி வலியுறுத்தியுள்ளார்.
மன்னார் மாவட்டத்தின் சுகாதாரம், மீனவ சமூகத்தின் வாழ்வாதாரம் மற்றும் ஒட்டுமொத்த அபிவிருத்தியை முன்னிறுத்தி எடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை எனவும், மன்னார் மக்களின் சார்பில் தனது நன்றிகளையும் பாராட்டுகளையும் மீண்டும் தெரிவித்துக் கொள்வதாகவும் ரிசான் சேக் அமானி குறிப்பிட்டுள்ளார்.











