யாழ்ப்பாணம் சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்ள வேலன் சுவாமிகள் உள்ளிட்ட நால்வரின் பெயர் குறிப்பிட்டும், நினைவேந்தல் நிகழ்வை தடைசெய்ய கோரி மன்றில் ஊர்காவற்துறை நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு மன்று திகதியிட்டுள்ளது.
வேலணை, சாட்டி பகுதியில் விடுதலைப்புலிகளின் மாவீரர் துயிலுமில்லம் அமைந்திருந்த காணி தம்முடையது எனவும், அதில் மாவீரர் நாள் நிகழ்வுகளை முன்னெடுக்க அனுமதிக்க கூடாது எனவும் காணி உரிமையாளர் என அடையாளப்படுத்தி ஒருவர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடந்த வாரம் முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுப்பவர்கள் என வேலன் சுவாமிகள் உள்ளிட்ட நால்வரிடம் வாக்குமூலங்களை பொலிஸார் பெற்றிருந்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த பொலிஸார், சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வை தடைசெய்ய வேண்டும் என விண்ணப்பம் செய்தனர்.
அதன்போது , பொலிஸார் தடைகேரிய விண்ணப்பத்தில் சட்ட பிரிவுகளை குறிப்பிடவில்லை என சுட்டிக்காட்டிய நீதவான், சட்டப்பிரிவுகளை குறிப்பிட்டு விண்ணப்பம் செய்யுமாறு அறிவுறுத்தி வழக்கினை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு திகதியிட்டுள்ளார்.











