மொன்றியல் (Montreal) நகரில் வீடற்ற நிலையில் வீதிகளிலும் தற்காலிகக் கூடாரங்களிலும் வாழும் மக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளையோ அல்லது அவசர மருத்துவப் பராமரிப்புகளையோ நாடிச் செல்வதற்குப் பொலிஸார் மீதான அச்சமே முதன்மையான தடையாக இருப்பதாகப் புதிய ஆய்வு அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.
தங்களை ஒடுக்கும் மற்றும் கண்காணிக்கும் ஒரு தரப்பாகவே அவர்கள் மொன்றியல் பொலிஸாரைக் கருதுகின்றனர்.
அதனால், அரசாங்கத்தின் சமூக நலத்திட்டங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் அணுகுமுறைகளை அவர்கள் புறக்கணித்து வருவதாக, அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மொன்றியல் பொலிஸ் திணைக்களமும் (SPVM) பிராந்திய சுகாதார அதிகாரிகளும் இணைந்து, வீதிகளில் வாழும் வீடற்றவர்களின் பிரச்சினைகளைக் கையாள்வதற்காக ‘கூட்டுப் படைகளை‘ (Mixed Squads) இயக்கி வருகின்றனர்.
இதில் பொலிஸ் அதிகாரிகளுடன் சமூக நலப் பணியாளர்கள் அல்லது சுகாதார நிபுணர்கள் இணைந்து செயல்படுகின்றனர்.
எனினும், இந்த முறைமை முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தக் கூட்டுப் படைகள் வீடற்ற மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிவர்த்தி செய்வதை விட, வணிக நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் குடியிருப்பாளர்களின் நலன்களை முன்னிட்டு, ஏழைகளை பொதுவெளியில் இருந்து அப்புறப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளதாக, விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.











