கியூபெக் (Quebec) மாகாணத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டு, மாகாணத்தின் முன்னணி அரசியல் கட்சித் தலைவர்களுக்கிடையே நடத்த திட்டமிடப்பட்டிருந்த உத்தியோகபூர்வ ஆங்கில மொழி விவாதம் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கியூபெக் மாகாணத்தின் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகள் இந்த விவாதத்தில் பங்கேற்க மறுப்புத் தெரிவித்தன. இதனை அடுத்து, இந்த விவாதத்தை ஏற்பாடு செய்திருந்த ஆங்கில ஊடகங்களின் கூட்டமைப்பு இதனை முற்றாகக் கைவிடுவதாக அறிவித்துள்ளது. இந்த ஆங்கில மொழியிலான விவாதமானது, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி இரவு, நடைபெறவிருந்தது.
கியூபெக் மாகாணத்தின் ஐந்து முக்கிய கட்சிகளின் தலைவர்களை ஒன்றிணைத்து 90 நிமிடங்கள் நேரலையாக நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த ஆங்கில விவாதமே தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. கியூபெக் மாகாண வரலாற்றில், இதுவரை 1985 மற்றும் 2018 ஆகிய இரு ஆண்டுகளில் மட்டுமே, மாகாண அரசியல் தலைவர்கள் பங்கேற்ற ஆங்கில விவாதங்கள் நடைபெற்றுள்ளன.
கடந்த 2022 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போதும் இதேபோன்று சில அரசியல் கட்சிகள் புறக்கணித்ததால் ஆங்கில விவாதம் ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.











