கியூபெக் (Quebec) மாகாணத்தை ஒரு தனி இறையாண்மை கொண்ட நாடாக மாற்றுவதற்கான தங்களின் நீண்டகாலக் கொள்கைத் திட்டத்தின் இறுதி வடிவமான புதிய ‘புளூ புக்’ எனப்படும் இறையாண்மை வழிகாட்டி அறிக்கையைப் பார்டி கியூபெகோயிஸ் (Parti Québécois – PQ) கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாகாணப் பொதுத்தேர்தலில் தங்களுக்குப் பெரும்பான்மை கிடைத்து ஆட்சி அமைத்தால், முதல் பதவிக்காலத்திலேயே கனடாவிலிருந்து பிரிவதற்கான சுதந்திரப் பொதுவாக்கெடுப்பு (Sovereignty Referendum) நடத்தப்படும் என்று, பார்டி கியூபெகோயிஸ் கட்சித் தலைமை மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மொன்றியலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே, இந்த ஆவணம் வெளியிடப்பட்டது.
பார்டி கியூபெகோயிஸ் (PQ) கட்சியின் தலைவர் பால் செயின்ட்-பியர் பிளாமோண்டன் (Paul St-Pierre Plamondon), 524 பக்கங்கள் கொண்ட இந்த ஆவணத்தை முறைப்படி அறிமுகம் செய்து வைத்தார். இந்த ஆவணத்தின் இறுதி அத்தியாயங்களின்படி, கியூபெக் மாகாணம் கனடாவின் கூட்டாட்சி அமைப்பிலிருந்து பிரிந்து தனி நாடாக உருவெடுத்தால், ஒட்டாவா மத்திய அரசுக்குச் செலுத்தும் தேவையற்ற வரிகள் மற்றும் இரட்டை நிர்வாகச் செலவுகள் தவிர்க்கப்படும் என்று
குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புளூ புக் ஆவணத்தில், கனேடிய டொலருக்குப் பதிலாக கியூபெக் நாட்டிற்கெனத் தனி நாணயம் (Quebec Currency) உருவாக்கப்படும் என்ற மிக முக்கியத் திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. கனேடிய டொலரிலிருந்து கியூபெக்கின் புதிய நாணயத்திற்கு மாறுவதற்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை ஆகலாம் என்றும், அதுவரை இடைக்காலப் பொருளாதாரச் ஸ்திரத்தன்மை பேணப்படும் என்றும் அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க டாலரையோ அல்லது கனேடிய டாலரையோ தொடர்ந்து பயன்படுத்துவது கியூபெக்கின் சொந்த நிதி சுதந்திரத்தைப் பாதிக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. தற்போது கியூபெக் மாகாணம் உலக அளவில் சுமார் 20 நாடுகளில் மட்டுமே தங்களின் பிரதிநிதித்துவ அலுவலகங்களைக் கொண்டுள்ளது.
கியூபெக் சுதந்திர நாடாக மாறியவுடன் இந்த எண்ணிக்கையை 40 நாடுகளாக, அதாவது இரண்டு மடங்காக உயர்த்தி உலகளாவிய தார்மீக மற்றும் பொருளாதாரச் செல்வாக்கை நிலைநாட்டுவதற்கு, பார்டி கியூபெகோயிஸ் (PQ) கட்சி திட்டமிட்டுள்ளது.
இதேவேளை, பார்டி கியூபெகோயிஸ் கட்சியின் இந்த ‘புளூ புக்’ திட்ட அறிக்கையைக் கியூபெக் லிபரல் கட்சி (Quebec Liberals) மற்றும் ஆளும் CAQ கட்சி ஆகியவை கடுமையாகச் சாடியுள்ளன.











