பெண்களுக்கு ஏற்படும் மூளைக் காயங்களை கண்டறிந்து, அவர்களை மனநல மற்றும் நரம்பியல் நிபுணர்களிடம் அனுப்பி வைக்கும் புதிய மருத்துவக் கட்டமைப்பு, கியூபெக் மாகாணத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நெருங்கிய துணைவர்களால் (Intimate Partner Violence) வன்முறைக்கு ஆளாக்கப்படும் பெண்களுக்கு ஏற்படும் தீவிர மூளைக் காயங்கள் மற்றும் பாதிப்புகள் பல ஆண்டுகளாகக் கண்டறியப்படாமலும், முறையான சிகிச்சையளிக்கப்படாமலும் புறக்கணிக்கப்பட்டு வருவதாகப் பாதுகாப்பு அமைப்புகளும் மருத்துவர்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.
குடும்ப வன்முறையினால் பாதிக்கப்படும் கனேடியப் பெண்களுக்குத் தலை மற்றும் உடலின் மேல் பாகங்களில் ஏற்படும் கடுமையான தாக்குதல்களால் Traumatic Brain Injury – eன்று அழைக்கப்படும் தீவிர மூளைக் காயம் ஏற்படுவது மிகச் சாதாரணமாகக் காணப்படுகிறது.
கனடா புள்ளிவிபரத் திணைக்களத்தின் (Statistics Canada) அண்மைக்காலப் பொதுப் பாதுகாப்பு ஆய்வறிக்கையின்படி, குடும்ப
வன்முறைக்குள்ளானவர்களில் 8,600 பேர் கடுமையான மூளை அதிர்ச்சி (Concussion) அல்லது தலைக் காயங்களுக்கு ஆளாகியுள்ளனர்
இச்சவாலை எதிர்கொள்ள, மொன்றியல் நகரத்தில் உள்ள வெஸ்ட் ஐலண்ட் மகளிர் காப்பகத்தின் (West Island Womens Shelter) இயக்குநர் கைலெய்ன் சிமார்ட் (Guylaine Simard) என்பவர், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மொன்றியல் பொலிஸாருடன் இணைந்து ஒரு கூட்டுப் பாதுகாப்பு அமைப்பை (Alliance MH2) உருவாக்கியுள்ளார்.
இதன் மூலம் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஏற்படும் மூளைக் காயங்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அவர்களை மனநல மற்றும் நரம்பியல் நிபுணர்களிடம் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கும் புதிய மருத்துவக் கட்டமைப்பு கியூபெக்கில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











