இணையதளங்களில் பெண்களைக் கீழ்த்தரமாகச் சித்தரிக்கும் ‘மேனோஸ்பியர்’ (Manosphere) மற்றும் பெண் உரிமை எதிர்ப்பு (Antifeminist) சித்தாந்தங்களின் பிடியில் சிக்கித் தீவிரவாதப் பாதைக்கு மாறும் இளம் ஆண்களையும், சிறுவர்களையும் ஆரம்பக் கட்டத்திலேயே மீட்டெடுக்க முழுமையான வாய்ப்புகள் உள்ளதாகக் நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.
இதற்காக இணையவழிப் பெண் வெறுப்புச் செல்வாக்காளர்களை (Online influencers) முறியடிக்கும் சிறப்புத் திட்டங்களுக்கு மத்திய அரசு அவசரமாக நிதி ஒதுக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கனடாவிலும் சர்வதேச அளவிலும் பெண் உரிமை எதிர்ப்புச் சித்தாந்தங்கள் இளைஞர்கள் மத்தியில் வேகமாகப் பரவி வருவது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது.
சமூகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து, பெண்களை அடக்கி ஆள்வதையும், வன்முறையை நியாயப்படுத்துவதையும் பெருமையாகப் பேசும் தீவிரப் போக்குகள் இணையத்தில் பரப்பப்படுகின்றன.
நாடாளுமன்றக் குழு விசாரணையின் போது, பெண் வெறுப்புச் சித்தாந்தங்களைப் பரப்புவது இன்று ஒரு பெரும் லாபகரமான தொழிலாக (Lucrative endeavour) மாறியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த நாடாளுமன்றக் குழுவின் பெரும்பாலான பொதுவான அம்சங்களை ஏற்றுக் கொண்ட போதிலும், கியூபெக் மாகாணத்தின் பிராந்தியக் கட்சியான பிளாக் கியூபெகோவா தனியாக ஒரு மாற்று அறிக்கையை (Dissenting report) இணைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.











