ஹாலிவுட் திரையுலகில் முன்னணி ஜோடியாக வலம் வரும் ‘ஸ்பைடர் மேன்’ படப்புகழ் டாம் ஹாலண்ட் (Tom Holland) மற்றும் ஜெண்டாயா (Zendaya) தங்களது நீண்ட நாள் காதலைத் தொடர்ந்து இப்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம் திரைக்கு வந்து 7 நாட்களில் உலகம் முழுவதும் சுமார் ரூ.11,750 கோடியை வசூலித்து மாபெரும் பாக்ஸ் ஆபீஸ் சாதனை படைத்துள்ள சூழலில், இந்தத் திருமணச் செய்தி உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு இரட்டைக் கொண்டாட்டமாக அமைந்துள்ளது.
இங்கிலாந்தின் சர்ரே பகுதியில் உள்ள மிக ஆடம்பரமான பீவர்புரூக் ஹோட்டல் தோட்டத்தில், இந்திய மதிப்பில் சுமார் ரூ.6.4 கோடி செலவில் 3 நாட்கள் இவர்களது திருமணக் கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக அரங்கேறியுள்ளன. ராபர்ட் டவுனி ஜூனியர், திமோதி சாலமேட், கைலி ஜென்னர் உட்பட ஹாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் என 250 பேர் மட்டுமே பங்கேற்ற இந்நிகழ்வில், மணமகனின் தோழனாக டாம் ஹாலண்டின் தம்பி சாம் உடனிருந்தார்.
திருமண நிகழ்வுகளின் புகைப்படங்கள் அல்லது தகவல்கள் சமூக வலைத்தளங்களில் கசியக் கூடாது என்பதற்காக, வருகை தந்த விருந்தினர்கள் மற்றும் பணியாளர்கள் செல்போன்களைப் பயன்படுத்தக் கடும் தடை விதிக்கப்பட்டிருந்ததுடன், விழா மேடைகள் அனைத்தும் ‘ஸ்பைடர் மேன்’ கருப்பொருளை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தன.
கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்பைடர் மேன்: ஹோம்கமிங்’ திரைப்படப் படப்பிடிப்பின் போது சந்தித்த இந்த ஜோடி, 2021-க்குப் பிறகு தங்களது காதலை மிக ரகசியமாகப் பேணி வந்த நிலையில், தற்போது திரையுலகப் பிரபலங்கள் மற்றும் சர்வதேச ரசிகர்களின் வாழ்த்துகளோடு இல்லற வாழ்க்கையில் இணைந்துள்ளனர்.











