திரைப்படத் தயாரிப்பில் ஏற்பட்ட சவால்கள், வழக்குகள் மற்றும் பல்வேறு தொழில்முறை நெருக்கடிகள் காரணமாகத் தாம் கடந்த 14 மாதங்களாக எந்தவொரு புதிய திரைப்படத்திலும் நடிக்க முடியாமல் வீட்டில் முடங்கியிருந்ததாகவும், அந்த இக்கட்டான காலகட்டத்தில் தனக்குத் தொடர்ந்து நம்பிக்கையும் ஊக்கமும் அளித்து வழிநடத்தியவர் தனது வருங்கால மனைவி சாய் தன்ஷிகா என்றும் நடிகர் விஷால் உருக்கமாகப் பேசியுள்ளார்.
திரையுலக நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், தனது சினிமா வாழ்க்கை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து மனம் திறந்து பகிர்ந்துகொண்டார்.
திரைப்படத் தயாரிப்பில் அடுத்தடுத்து நேரிட்ட பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் சட்ட ரீதியான முடக்கங்கள் காரணமாகத் தன்னால் புதிய திட்டங்களைத் தொடங்க இயலவில்லை என்றும், ஒரு நடிகராக இது மிகவும் மன உழைச்சலைத் தந்த சோதனையான காலகட்டம் என்றும் விஷால் குறிப்பிட்டார்.
அந்தச் சூழலில், “மீண்டும் பழைய வேகத்துடன் உங்களால் களமிறங்க முடியும்” என்ற நேர்மறை எண்ணத்தையும் தன்னம்பிக்கையையும் விதைத்து, தொடர்ந்து ஊக்கமளித்தவர் சாய் தன்ஷிகா என்றும், அவர் இல்லையென்றால் இவ்வளவு நம்பிக்கையுடன் மீண்டும் திரையுலகில் நின்றிருக்க முடியாது என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தற்போது அனைத்துத் தடைகளையும் தாண்டி மீண்டுவந்துள்ள விஷால், நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். அவர் இயக்கி நடித்து வரும் ‘மகுடம்’ திரைப்படத்தின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், திரையுலகில் சந்தித்த சவால்கள் குறித்தும், அதற்குத் உறுதுணையாக இருந்த வருங்கால மனைவி சாய் தன்ஷிகா குறித்தும் அவர் பேசிய பேச்சு ரசிகர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.











