தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கி வெற்றிகரமான இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், முதன்முறையாகக் கதாநாயகனாக நடிகராக அவதாரமெடுத்துள்ள ‘டி.சி.’ (DC) திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபீஸில் ரூ.5.70 கோடி வசூலித்து நேர்மறையான வரவேற்பைப் பெற்றுள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘ஏ’ (A) சான்றிதழ் வழங்கிய நிலையில், நாடு முழுவதும் 3,500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் பிரம்மாண்டமாக வெளியானது.
திரைப்படத்தின் கதைச்சுருக்கத்தின்படி, தேவதாஸ் மற்றும் சந்திரா எனும் பெயர்களின் சுருக்கமே ‘டி.சி’ ஆகும். கேங்ஸ்டரான லோகேஷ் கனகராஜ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து காவல்துறையின் ஆயுதங்களைக் கொள்ளையடிப்பதோடு, ஒரு உயர் அதிகாரியையும் கொடூரமாகப் படுகொலை செய்கிறார்.
இதன்பின் காவல்துறையினரால் கைது செய்யப்படும் சூழலில், லோகேஷுடன் நட்பாக இருந்த பாடகி சஞ்சனா சுட்டுக் கொல்லப்படுகிறார். அங்கிருந்து தப்பிக்கும் லோகேஷ், விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டுள்ள வாமிகா கபியை தற்செயலாகச் சந்திக்கிறார். விரும்பத்தகாத வாழ்க்கையிலிருந்து மீளத் துடிக்கும் வாமிகா, லோகேஷுடன் இணைய, இருவரையும் துரத்தும் காவல்துறையிடமிருந்து தப்பிக்க அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களே படத்தின் விறுவிறுப்பான திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மட்டும் முதல் நாளில் ரூ.4.70 கோடியை நிகரமாக வசூலித்துள்ள இத்திரைப்படம், வெளிநாடுகளில் கூடுதல் வசூலாக ரூ.1 கோடியை ஈட்டி மொத்தம் ரூ.5.70 கோடி வசூலை எட்டியுள்ளது.
வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜின் அதிரடி ஆக்ஷன் அவதாரம் ரசிகர்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்பையும் பலத்த வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.











