தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் வெங்கட் பிரபு, திரைத்துறையில் தனது 20 ஆண்டு காலப் பயணத்தை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு, தனக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துச் சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனது முதல் படமான ‘சென்னை 600028’ படத்தின் கதையை நம்பி தனக்கு வாய்ப்பளித்ததற்காக, மறைந்த புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் அவரது மகனும் தயாரிப்பாளருமான எஸ்.பி.பி. சரண் ஆகியோருக்கு தனது முதற்கண் நன்றியை அவர் உரித்தாக்கியுள்ளார்.
இந்த 20 ஆண்டுகள் ஒரு அழகான பயணமாக அமைந்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு திரைப்படமும் புதிய சவால்களையும் அனுபவங்களையும் கற்றுக்கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார். சில படங்கள் உடனடியாகக் கொண்டாடப்பட்டதாகவும், சில படங்கள் காலப்போக்கில் மக்களின் அன்பைப் பெற்றதாகவும், சில படங்கள் தான் வளர்வதற்கு உதவிய பாடங்களாக அமைந்ததாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
தான் மேற்கொண்ட ஒவ்வொரு புதிய முயற்சிக்கும், ஏற்ற இறக்கங்களின் போதும் ரசிகர்கள் அளித்த அளப்பரிய அன்பும் ஆதரவுமே தன்னைத் தொடர்ந்து புதிய கதைகளை இயக்க ஊக்கமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள வெங்கட் பிரபு, இனிவரும் காலங்களிலும் தனது வழக்கமான புதுமையான பாணியில் திரைப்படங்களை இயக்கவுள்ளதாக உறுதியளித்துள்ளார். அவரது இந்த நெகிழ்ச்சியான பதிவிற்குத் திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் இணையத்தில் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.











