ஓய்வுபெற்ற போர் விமானி ஸ்டீபன் ஃபர் (Stephen Fuhr), தற்போது மத்திய அரசின் பாதுகாப்புத் துறை கொள்முதல் தொடர்பான இராணுவ விவகாரங்களுக்கான செயலாளராக (Secretary of State for Defence Procurement) நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசு, அமெரிக்காவின் எஃப்-35 (F-35) ரகப் போர் விமானங்களைக் கொள்முதல் செய்யும் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தவரும் அதனால் இராணுவ வட்டாரங்களில் விமர்சனங்களுக்கு உள்ளானவருமான ஸ்டீபன் ஃபர் (Stephen Fuhr), பாதுகாப்புத் துறை கொள்முதல் தொடர்பான துறைக்கு நியமிக்கப்பட்டுள்ளமை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
கனடிய அரசப் படைப் பிரிவின் (RCAF) முன்னாள் போர் விமானியான ஸ்டீபன் ஃபர், 2009 ஆம் ஆண்டில் இராணுவப் பணியிலிருந்து ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, அமெரிக்க தயாரிப்பான எஃப்-35 போர் விமானங்களை கனடா வாங்குவதற்கு எதிராகக் குரல் கொடுத்தார்.
இந்த எஃப்-35 விமானங்கள் அதிக செலவீனத்தைக் கொண்டவை என்றும், கனடாவின் பரந்த வான்பரப்பைப் பாதுகாப்பதற்கு ஒற்றை எஞ்சின் கொண்ட எஃப்-35 விமானங்களை விட இரட்டை எஞ்சின் கொண்ட விமானங்கள் மட்டுமே உகந்தன என்றும் அவர் தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில், தற்போதைய அரசின் பாதுகாப்புத் துறை கொள்முதல் நடைமுறைகளை விரைவுபடுத்தவும், சீரமைக்கவும் புதிதாக உருவாக்கப்பட்ட பாதுகாப்பு முதலீட்டு முகமையின் (Defence Investment Agency) தலைமையையும், பாதுகாப்புச் செயலாளருக்கான பொறுப்பையும் ஸ்டீபன் ஃபர் ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











