ரஷ்யாவின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைனின் வான் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக கனடா 350 மில்லியன் கனேடிய டொலர் மதிப்பிலான புதிய பாதுகாப்பு உதவியை வழங்கியுள்ளது.
கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி இடையே இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து இந்த உதவித் தொகை தொடர்பான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதியின் மூலம் உக்ரைனுக்குத் தேவையான வான் பாதுகாப்பு இடைமறிப்பு ஏவுகணைகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன. குறிப்பாக ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கு முக்கியமான இடைமறிப்பு ஏவுகணைகளைப் பெற்றுக்கொள்வதே இதன் பிரதான நோக்கமாகும்.
எவ்வாறாயினும், எந்த வகையான ஏவுகணைகள் வழங்கப்படும் மற்றும் அவை எப்போது உக்ரைனைச் சென்றடையும் என்பது தொடர்பான முழுமையான விபரங்களை கனேடிய அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை. இந்த உபகரணங்கள் அமெரிக்காவின் மூன்றாம் தரப்பு கொள்வனவு திட்டத்தின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அடுத்த இரண்டு ஆண்டுகளில் கனடாவில் மில்லியன் கணக்கான ட்ரோன்களை உற்பத்தி செய்யும் இலக்கையும் பிரதமர் கார்னி அறிவித்துள்ளார். அவற்றில் மூன்றில் ஒரு பங்கு உக்ரைனின் பாதுகாப்புக்காக வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பை ஆரம்பித்ததிலிருந்து, கனடா உக்ரைனுக்கு 25.5 பில்லியன் கனேடிய டொலருக்கும் அதிகமான உதவிகளை உறுதியளித்துள்ளது. இதில் சுமார் 8.5 பில்லியன் கனேடிய டொலர் இராணுவ உதவியாகும்.
மேலும், உக்ரைனின் குளிர்கால எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக ஐரோப்பிய புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி வங்கிக்கு சுமார் 435 மில்லியன் கனேடிய டொலர் புதிய கடன் உத்தரவாதங்களையும் கனடா வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் வான் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், உக்ரைனின் வான் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதில் கனடாவின் புதிய உதவி முக்கிய பங்களிப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.










