இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 10-வது திரைப்படமான ‘டோரதி’ (Dorothy), கனடாவின் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (TIFF) திரையிடப்பட்டுள்ளது.
பத்து வருடங்களுக்குப் பிறகு டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் முதல் இந்தியத் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை இத்திரைப்படம் பெற்றுள்ளது.
விழாவின் ‘சென்டர்பீஸ்’ (Centerpiece) பிரிவில் செப்டம்பர் 11 அன்று திரையிடப்பட்ட இத்திரைப்படம், சர்வதேசப் பார்வையாளர்களின் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
இத்திரைப்படத்தில் சனந்த், ரிஷிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தம்மம் ஃபிலிம்ஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் சார்பில் ஜோதி தேஷ்பாண்டே, குணீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
டொராண்டோவில் உள்ள ஸ்காட்டியாபேங்க் திரையரங்கில் நடைபெற்ற இத்திரை திரையிடல் நிகழ்வில், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுடன் நடிகர்கள் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் மற்றும் தயாரிப்பாளர்கள் குணீத் மோங்கா கபூர், அச்சின் ஜெயின் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், “டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் உலகளவில் முதன்முறையாகப் படம் திரையிடப்படுவது மிகவும் விசேஷமானது.
நான் சொல்ல விரும்பிய கதையின் உண்மைத்தன்மையை அப்படியே உலகப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்க இது வாய்ப்பளித்துள்ளது. மேலும், இளையராஜா சாரின் இசை இந்தப் பயணத்திற்குத் துணையாக இருப்பது மேலும் சிறப்பு” எனத் தெரிவித்தார்.
இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
இது அவர் இசையமைக்கும் 1,540-வது திரைப்படமாகும். இப்படத்தில் இடம்பெற்ற ‘கல்யாண விருந்து’ மற்றும் ‘முத்துமணி’ ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், திரைப்படம் செப்டம்பர் 25 அன்று வெளியாகவுள்ளது.











