யாழ்ப்பாணம், கைதடி புதிய தபால் நிலையம் இன்றைய தினம் சனிக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்காக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ திறந்து வைத்தார்.
கடந்த 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் 02ஆம் திகதி, கடற்றொழில் அமைச்சர் இரா.சந்திரசேகரனால், அடிக்கல் நாட்டப்பட்டு நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், கட்டுமானப் பணிகள் 11 மாதங்களுக்குள் நிறைவுசெய்யப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது,
புதிய தபால் நிலையக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்காக தபால் திணைக்களம் ரூ.29 மில்லியன் நிதியை செலவிட்டுள்ளது.
தபால் நிலையத்திற்கான காணியினை , கைதடி பிரதேசத்தில் வசித்த அமரர் ஆறுமுகம் சூரியகுமார் ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தினர், கடந்த வருடம் காணியை அன்பளிப்பாக வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை அமரர் ஆறுமுகம் சூரியகுமாரின் சேவையை நினைவுகூரும் வகையில், தபால் திணைக்களத்தின் முத்திரைப் பணியகத்தின் யாழ்ப்பாண உப அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட முத்திரைத் தாள் நினைவுச் சின்னமாக அவரது மனைவி மற்றும் இளைய மகனிடம் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச. சிறிபவானந்தராஜா, தபால் திணைக்களத்தின் பிரதி தபால்மா அதிபர்கள், அதிகாரிகள், கைதடி தபால் நிலைய ஊழியர்கள் மற்றும் பிரதேச மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.










