நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெளியிடப்பட்டுள்ள அண்மைய கண்காணிப்புத் தரவுகளின்படி, செப்டம்பர் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மொத்தம் 100,127 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
செப்டம்பர் மாதத்தில் 27 ஆம் திகதி வரை 4,637 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் ஆகஸ்ட் மாதத்தில் 10,155 நோயாளர்களும், ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 29,964 நோயாளர்களும் பதிவாகியிருந்தனர்.
மாவட்ட ரீதியில் அதிகளவான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். அங்கு 21,234 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக கொழும்பு மாவட்டத்தில் 19,634 நோயாளர்களும் , கண்டி மாவட்டத்தில் 7,624 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
அத்துடன் களுத்துறையில் 6,365 நோயாளர்களும், மாத்தறையில் 6,284 நோயாளர்களும் காலியில் 5,465 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாகாண ரீதியில் பார்க்கும்போது, நாட்டின் மொத்த டெங்கு நோயாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். அங்கு மொத்தம் 52,562 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை தென் மாகாணத்தில் 14,388 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 9,498 நோயாளர்களும், சபரகமுவ மாகாணத்தில் 8,268 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.











