பஞ்சாப் மாநிலத்தில் இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லையைக் கடக்க முயன்ற சந்தேகத்திற்குரிய பாகிஸ்தானியர் இருவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் (BSF) சுட்டுக்கொன்றுள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தின் தாரன் தாரன் மாவட்டத்தில் உள்ள கல்ரா பகுதியில் உள்ள ராஜோக் எல்லைச் சாவடிக்கு அருகே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எல்லைப் பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து சிலர் சந்தேகத்திற்கிடமான முறையில் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றுள்ளனர்.
இதனை அவதானித்த பாதுகாப்புப் படையினர், உடனடியாக அவர்களைத் தடுத்து நிறுத்துவதற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும், பாதுகாப்புப் படையினரின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாது அவர்கள் தொடர்ந்து எல்லைப் பகுதியை நோக்கி முன்னேறி வந்ததால், பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் எல்லை ஊடுருவலில் ஈடுபட்ட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, மேலதிக அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்காக உள்ளூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து எல்லைப் பகுதியில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.











