பிரேசிலில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு சில தினங்களே உள்ள நிலையில், பாதுகாப்பு அச்சங்களைக் காரணம் காட்டி, அங்குள்ள தனது தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்களின் சேவைகளை அமெரிக்கா வெள்ளிக்கிழமை இடைநிறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, பிரேசிலில் உள்ள தனது தூதரகத்தை மூடியுள்ளதாக ஆஸ்திரேலியாவும் அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுடன் இந்த பாதுகாப்புப் பிரச்சினைகளை நேரடியாகத் தொடர்புபடுத்தாத அமெரிக்க வெளியுறவுத் துறை, அது குறித்து மேலதிக விவரங்கள் எதையும் வெளியிடவில்லை.
எனினும், வெளிநாட்டுத் தலையீடுகள் பற்றிய குற்றச்சாட்டுகள் மற்றும் வாஷிங்டனுக்கும் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவின் அரசாங்கத்திற்கும் இடையிலான பதற்றங்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புக் கவலைகள் குறித்து பிரேசில் அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகத் தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத் துறை, இந்த சேவைகள் மீண்டும் எப்போது தொடங்கும் என்பதைக் குறிப்பிடவில்லை.
மேலும், அவசர உதவிகளை நாடும் அமெரிக்கக் குடிமக்கள் தூதரகம் அல்லது துணைத் தூதரகப் பகுதிகளுக்கு வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் எச்சரிக்கையை அடுத்து, பிரேசிலில் உள்ள ஆஸ்திரேலியத் தூதரகமும் வெள்ளிக்கிழமை மூடப்படும் என பிரேசிலுக்கான ஆஸ்திரேலியத் தூதர் சோஃபி டேவிஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிரேசிலில் உள்ள அமெரிக்கத் தூதரக வளாகங்களைத் தவிர்க்குமாறு ஆஸ்திரேலியர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் இந்தத் தூதரக மூடல் நடவடிக்கையானது முன்னெப்போதும் இல்லாத ஒன்று என்றும், பிரேசிலிய பொதுமக்களின் கருத்துகளில் செல்வாக்கு செலுத்த டிரம்ப் முயலும் வழிகளில் இதுவும் ஒன்று என்றும் லூலாவின் தொழிலாளர் கட்சியின் தலைவர் எடின்ஹோ சில்வா விமர்சித்துள்ளார்.
அதேவேளை, பிரேசில் தேர்தலில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் தலையீடுகள் இருப்பதாக பிரேசில் உளவுத்துறை அதிகாரிகள் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி பிரதிநிதிகளிடம் விளக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், தேர்தல் தலையீட்டுக் குற்றச்சாட்டுகளை அமெரிக்க வெளியுறவுத் துறை நிராகரித்துள்ளது.











