தியாகி திலீபனின் நினைவேந்தல் மற்றும் அவரது சிலை அமைப்பது தொடர்பான விடயங்களை அரசியலாக்காமல், அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு பொறுப்புடன் செயற்பட்டிருக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் சுந்தரமூர்த்தி கபிலன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வு புதன்கிழமை நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
திலீபனின் நினைவேந்தல் தொடர்பான விடயங்களில் தேசிய மக்கள் சக்தி கட்சி எந்தவித எதிர்ப்பு நிலைப்பாட்டையும் எடுத்திருக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், தியாகத்தின் மீதான மரியாதையின் அடிப்படையில் தமது உறுப்பினர்கள் மலரஞ்சலி செலுத்தியதாகவும், திலீபனின் சிலையை அமைப்பது தொடர்பான பிரேரணை சபைக்கு கொண்டுவரப்பட்டபோதும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
ஒரு சிலையை நிரந்தரமாக அமைப்பதற்கான தீர்மானத்தை முன்வைக்க வேண்டுமெனில், உரிய கால அவகாசத்துடன் பிரேரணையைச் சமர்ப்பித்து, அது நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்று, தேவையான சட்ட ஆலோசனைகளைப் பெற்ற பின்னரே சபையில் கலந்துரையாடப்பட்டிருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
ஆனாலும் சிலை அமைப்பது தொடர்பான நடவடிக்கையின் ஆரம்ப கட்டத்தில் அது தற்காலிகமாக அமைக்கப்படுவது என்றே கலந்துரையாடப்பட்டு, தீர்மானமாகவும் எடுக்கப்பட்டிருந்தது. தமது கட்சியுடன் இது தொடர்பில் கலந்துரையாடப்படாத போதிலும், இந்த விடயத்தில் தாம் மரியாதையுடன் அமைதியாக இருந்ததாக அவர் கூறினார்.
இருப்பினும், அதன் பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக தமது அரசாங்கத்தின் மீது பழிசுமத்தும் வகையில் அமைந்தமை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட உறுப்பினர் கபிலன், தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் நோக்கிலேயே தாம் ஆதரவளித்த நிலையில், தற்போது தங்களுடன் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அதேவேளை, திலீபனின் நினைவு மற்றும் சிலை தொடர்பான விடயத்தில் காவல்துறையின் நடவடிக்கைகளை அரசியல் ரீதியாக விமர்சிப்பதைத் தவிர்த்து, ஏதேனும் சட்டவிரோதம் அல்லது அநீதி இடம்பெற்றதாகக் கருதப்பட்டால் உரிய சட்ட நடைமுறைகளை நாடுவதே பொருத்தமானது என்றும் அவர் கூறினார்.
நினைவேந்தல் போன்ற உணர்வுபூர்வமான விடயங்களை ஊடகப் பிரசாரம் அல்லது அரசியல் விளம்பரத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்திய அவர், தியாகத்தின் நினைவை ஒவ்வொரு முறையும் அரசியல் விவாதத்திற்குள் கொண்டு வந்து சிக்கலாக்குவது வேதனையளிப்பதாகவும், அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.











