நாட்டின் பண்டாரகம, ஹிக்கடுவ, ஹொரணை மற்றும் எம்பிலிப்பிட்டிய ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற தனித்தனி வீதி விபத்துகளில் இரு பெண்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பண்டாரகம, கல்தூடை பகுதியில் வீதியைக் கடக்க முயன்ற 59 வயதுடைய பெண் ஒருவர், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து மோதியதில் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை, ஹிக்கடுவ, காலி – கொழும்பு பிரதான வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில், மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணித்த 52 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, ஹொரணை, எல்லகந்த வீதியில் ரப்பர் மர விறகுகளை ஏற்றிச் சென்ற டிராக்டர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில், அதன் 32 வயதுடைய சாரதி உயிரிழந்துள்ளார்.
இதற்கிடையில், எம்பிலிப்பிட்டிய – மொரகெட்டிய வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கார் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் படுகாயமடைந்து எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த செவனகல பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்துகள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.











