கொழும்பில் கடந்த அக்டோபர் 12,13 ஆம் திகதிகளில் சிலோன் வர்த்தக சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சி மாநாடு’ நடைபெற்றது.
இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியத் தொழில் கூட்டமைப்பு (CII) மற்றும் கொச்சி வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 10 உறுப்பினர்களைக் கொண்ட இரண்டு வணிகக் குழுக்கள் இலங்கைக்கு வருகை தந்தன.
இலங்கையில் உள்ள வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராயவும், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் மேம்படுத்தவும் சுகாதாரம், மருந்துகள், சூரிய ஆற்றல், தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் காலணி தயாரிப்பு உள்ளிட்ட துறைகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய CII குழு முக்கிய சந்திப்புகளை நடத்தியது.
எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க, தொழில் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் சதுரங்க அபேசிங்க, இலங்கை முதலீட்டு வாரியம் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்தின் (EDB) உயர் அதிகாரிகளுடன் முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் சாத்தியமான வணிக ஒத்துழைப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதேபோன்று சுகாதாரம், தளபாடங்கள், கட்டுமானப் பொருட்கள், வணிக ஆலோசனை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத் துறை சார்ந்த கொச்சி வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனக் குழுவும் முக்கிய சந்திப்புகளை மேற்கொண்டது.
இக்குழுவினர் நெஸ்லே மற்றும் எலிஃபண்ட் ஹவுஸ் உற்பத்தி நிலையங்களைப் பார்வையிட்டதுடன், B2B சந்திப்புகளையும் நடத்தினர்.
இரு குழுக்களும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களைச் சந்தித்துப் பேசின.
இதன்போது இந்திய வணிகங்களுக்கான வளர்ந்து வரும் வாய்ப்புகள் குறித்துப் பகிர்ந்துகொண்ட உயர்ஸ்தானிகர், வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய அவர்களுக்கு ஊக்கமளித்தார்.
இதன் ஒரு பகுதியாக, கேரளா மற்றும் இலங்கைக்கு இடையிலான வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் கொச்சி வர்த்தக மற்றும் தொழில் சபையும் சிலோன் வர்த்தக சபையும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன.
இதில் கொச்சி வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் திரு. சி. எஸ். கார்த்தா மற்றும் சிலோன் வர்த்தக சபையின் தலைவர் திரு. கிரிஷன் பாலேந்திரா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் தெற்கு குஜராத் வர்த்தக சபை மற்றும் இந்திய வர்த்தக சபையின் தமிழ்நாடு மாநில கவுன்சில் ஆகியவற்றின் வணிகக் குழுக்களும் இலங்கைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.











