மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில், மன்னார் பிரதான பாலம் நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள வங்காலை பறவைகள் சரணாலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சுற்றுலா தகவல் மையம் இன்றைய தினம் வியாழக்கிழமை (15.10.2026) காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்ரன் ஜயக்கொடி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஜெகதீஸ்வரன் ஆகியோர் இணைந்து குறித்த சுற்றுலா தகவல் மையத்தைத் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், உதவி அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், பிரித்தானிய தூதரக அலுவலர்கள், UNDP நிறுவன அலுவலர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, அங்கு முன்னெடுக்கப்பட்டுள்ள பணிகள் தொடர்பாக ஆராயப்பட்டதோடு, கண்டல் தாவரங்கள் உள்ளடங்கலாக இயற்கையைச் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள பகுதியையும் கலந்துகொண்ட குழுவினர் நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.
குறித்த சுற்றுலா தகவல் மையத்தை அமைப்பதற்கான நிதி மற்றும் ஏனைய பங்களிப்புகளைப் பிரித்தானிய தூதரகம் மற்றும் UNDP நிறுவனம் என்பன வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.











