நீதிமன்றக் கட்டமைப்பின் ஊடாக வழங்கப்படும் தீர்ப்பே நீதி தொடர்பான சரியான முடிவாகும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது என்றும், அந்தத் தீர்ப்புக்குத் தாம் கட்டுப்படுவதாகவும் தெரிவித்த அவர், அதற்கு அப்பால் தன்னிடம் முடிவுகளை எதிர்பார்க்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட மகளிர் மாநாடு பதுளையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, “சட்டம் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். இந்த விடயத்தில் நாம் உறுதியாக இருக்கின்றோம்” எனக் கூறினார்.
மேலும், சட்டம் தம்மை நெருங்காது எனக் கருதியவர்களும், கடந்த காலங்களில் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்திச் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியவர்களுமே தற்போது சட்டம் அமுல்படுத்தப்படுவதற்கு எதிராகக் கூக்குரல் எழுப்புகின்றனர் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.











