கடந்த 17ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டுடன் தொடர்புடைய தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது ஜெனரேட்டர் அலகு தொடர்ந்தும் இயங்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், தரமற்ற நிலக்கரியே மின்வெட்டுக்குக் காரணம் என எதிர்க்கட்சியினர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.
குறித்த ஜெனரேட்டர் அலகு, இந்த ஆண்டு ஜூலை 30ஆம் திகதி முதல் செப்டம்பர் 30ஆம் திகதி வரை 62 நாட்கள் பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், செப்டம்பர் 4ஆம் திகதி முதல் புதிய நிலக்கரி விநியோகத்திலிருந்து பெறப்பட்ட நிலக்கரியே மின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், எனவே நிலக்கரியின் தரத்திற்கும் இந்தச் சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மின்வெட்டினால் ஏற்பட்ட நிதி இழப்புகள் தொடர்பான கணக்கீடுகளை எதிர்க்கட்சியினர் மேற்கொண்டு வருவதாகவும், அதற்கான புள்ளிவிவரங்கள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகக் கட்டமைப்பை மீண்டும் சீரமைப்பதே அரசாங்கத்தின் தற்போதைய முக்கிய பணியெனக் குறிப்பிட்ட நலிந்த ஜெயதிஸ்ஸ, அதிகாரிகள் வழங்கிய உறுதிமொழிகளுக்கு அமைய, நாளை முதல் மின் உற்பத்தி நிலையம் இயல்பு நிலைக்குத் திரும்பும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.











