பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமானது.
இதன்போது, கடந்த கூட்டத்தின் அறிக்கை ஆராயப்பட்டு சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, நிதிக் கொடுக்கல் வாங்கல்களுக்கான அனுமதிகள், சபையின் வணிக மையங்களைக் குத்தகைக்கு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலயத்தினரால் வளைவு அமைப்பதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், அதற்கான உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் அனுமதி வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், சபைக்குச் சொந்தமான ஜேசிபி இயந்திர வாகனத்தை மணித்தியாலத்திற்கு 7,500 ரூபா வாடகைக்கு வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.
மருதங்குளம் வீதியைப் புனரமைப்பதற்கான ஒப்பந்தத்தைப் பெற்ற ஒப்பந்ததாரர், உரிய பணிகளை மேற்கொள்ளாத காரணத்தினால், குறித்த வீதிப் புனரமைப்புப் பணிகளை மீண்டும் ஒப்பந்தம் செய்வதற்கும் சபை தீர்மானித்தது.
மேலும், பருத்தித்துறை நகர சபைக்கு, பருத்தித்துறை பிரதேச சபையின் கழிவகற்றும் சேவையைப் பயன்படுத்துவதற்கு டிசம்பர் 31ஆம் திகதி வரை அனுமதி வழங்கப்பட்டது. இதேவேளை, நண்பர்கள் அமைப்பினால் கிராம வீதிகளுக்குப் பெயர்ப்பலகைகள் அமைப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது.
இதன்போது, பொதுமக்களால் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.
இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக, ஊடகக் கலைஞர்களுக்கு ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இசைக்கருவிகளை வழங்குவதற்கும், 125 மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்களை வழங்குவதற்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனுடன், 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் முன்வரைவும் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இறுதியாக, தவிசாளர் உதயகுமார் யுகதீஸுக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்படும் விஷமப் பிரசாரங்களுக்கு எதிராக, சபையிலுள்ள அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் தமது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தனர்.











