ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையின் ஹெப்ரான் பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையைத் தொடர்ந்து சுமார் 1,200 பாலஸ்தீனியர்கள் அவர்களின் வீடுகளை விட்டு கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ராணுவச் சாவடிக்கு அருகே பாலஸ்தீன துப்பாக்கிதாரிகள் இருவர் நடத்திய தாக்குதலில் இரண்டு இஸ்ரேலிய சிப்பாய்கள் கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு பாரிய அளவிலான ராணுவ நடவடிக்கை தொடங்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருந்தார்.
தாக்குதல் நடத்திய துப்பாக்கிதாரிகள் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய ராணுவம், ஆயுதங்கள் மற்றும் போராளிகளைத் தேடும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், கட்டடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
பாலஸ்தீன அதிகாரசபை இந்த நடவடிக்கையை “கூட்டுத் தண்டனை” என விமர்சித்துள்ளது.
ஏற்கெனவே 1,200 பேர் இடம்பெயர்ந்துள்ள நிலையில், மேலும் 1,300 பேர் வரை வீடுகளை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக ஹெப்ரான் மாநகர முதல்வர் யூசுப் சுஹைர் அல்-ஜபாரி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் குடியேற்றவாசிகளின் வாக்குகளைப் பெறுவதற்காகவே நெதன்யாகுவின் அரசு இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இஸ்ரேலிய படைகள் சுமார் 70 பாலஸ்தீனியர்களைக் கைது செய்துள்ளதாக பாலஸ்தீன கைதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் ஹெப்ரான் பகுதியில் கடைகள், தொழிற்சாலைகள், வீடுகள் மற்றும் வீதிகள் அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த குடியிருப்பாளர்கள், தாக்குதலுடன் எந்தத் தொடர்பும் இல்லாத பொதுமக்களும் வெளியேற்றப்படுவதாகக் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேற்குக்கரை முழுவதிலும் உள்ள பெரும்பாலான பாலஸ்தீன நகரங்களின் நுழைவாயில்களை இஸ்ரேல் முடக்கியுள்ளதால், மக்களின் போக்குவரத்துப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மருத்துவ சிகிச்சைகளுக்காகச் செல்வோரும் கடுமையான சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகக் கூறப்படுகிறது.











