மொன்றியல் நகர மையப் பகுதியில் அமைந்துள்ள வங்கியொன்றில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட பாலஸ்தீன ஆதரவாளர்கள் மீதான அனைத்துக் குற்றவியல் குற்றச்சாட்டுகளையும் அரசு வழக்கறிஞர் (Crown) திரும்பப் பெற்றுள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மொன்றியலில் உள்ள ஸ்கோடியா வங்கி (Scotiabank) கிளையொன்றில் உள்நுழைந்த 44 பாலஸ்தீன ஆதரவாளர்கள் அங்கே திடீரென உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இஸ்ரேலிய ஆயுத உற்பத்தி நிறுவனமான எல்பிக் சிஸ்டம்ஸ் (Elbit Systems) நிறுவனத்திலிருந்து, ஸ்கோடியா வங்கி தனது முதலீடுகளை முழுமையாகப் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இப்போராட்டம் நடத்தப்பட்டது.
இதன்போது மொன்றியல் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 44 பேரில் 14 பேர் நகராட்சி ஒலி மாசு விதியை மீறிய குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், தலா 300 டொலர் அபராதத் தொகையைச் செலுத்த உடன்பட்டுள்ளனர்.
ஏனைய போராட்டம் நடத்திய பெரும்பாலானோர் ஏற்கனவே சமூக சேவைப் பணிகளில் ஈடுபட்டு தமக்கு எதிரான வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதாக அவர்களின் பிரதிநிதித்துவ வழக்கறிஞர் பார்பரா பெடோன்ட் (Barbara Bedont) தெரிவித்துள்ளார்.
குறித்த குற்றவியல் வழக்கு முடிவுக்கு வருவதற்குச் சில மாதங்களுக்கு முன்பாக, ஸ்கோடியா வங்கி, இஸ்ரேலிய ஆயுத உற்பத்தி நிறுவனமான எல்பிக் சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் வைத்திருந்த தங்களின் எஞ்சிய அனைத்துப் பங்கையும் விற்பனை செய்து, முதலீடுகளைத் திரும்பப் பெற்றது.
இந்த நடவடிக்கையைத் தங்களது போராட்டத்திற்கு கிடைத்த முக்கிய வெற்றியாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வரவேற்றுள்ளனர்.
அதேவேளையில், வழக்கு விசாரணைகளின் போது தங்களுக்கு எதிராகச் சார்புநிலையுடன் நடந்துகொண்டதாகவும் நியாயமற்ற முறையில் நடத்தியதாகவும் குற்றம்சாட்டி, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிகாரப்பூர்வமாக முறைப்பாடு செய்துள்ளனர்.
மொன்றியல் பொலிஸாரின் நடவடிக்கை தங்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக அமைந்ததாகக் கூறி, கனடிய உரிமைகள் மற்றும் சுதந்திர சாசனத்தின் (Charter) கீழ் இக்குற்றச்சாட்டுகளைப் போராளிகள் சட்டரீதியாக சவாலுக்கு உட்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.











