முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குவது தொடர்பான கோரிக்கை குறித்து விளக்கமளிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வதற்கு அனுமதி கோரி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஏற்கனவே சிங்கப்பூரில் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள அவருக்கு, அங்கு மேலதிக மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
எனினும், வழக்கில் மனுதாரராக உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதையடுத்து, பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குவது தொடர்பான தனது நிலைப்பாட்டை விளக்குவதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதவான் உத்தரவிட்டார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் பின்னணியில் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட சிலருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











